கன்னி நிலம் - ஜெயமோகன்
Updated: Oct 3, 2021
"இரவில் இருளில் ததும்பிவரும் அழுகை மிகத் தூயது. மிக மென்மையானது. மிக மிக இனியதும்கூட "
என்ன ஒரு அற்புதமான வாசிப்பு. ஜெயமோகனின் எழுத்துக்கள் நம்மை வேறு உலகத்திற்கு, ஆம் இந்த கன்னி நிலத்திற்கே கொண்டு செல்கிறது.என்ன ஒரு கதை இது ! அன்பின் சாரம் என்ன ? எல்லைகளை தாண்டி செல்லும் என்று சொல்வது வழக்கமான சொல்லாடல், ஆயினும் மனிதனால் உருவாக்கப்பட்ட அத்தனை எல்லைகளையும் நொறுக்கி தள்ளும் காற்றாற்று வெள்ளம் அல்லவோ தூய அன்பு.

இன்று நம் உலகில் வகுக்கப்பட்டிருக்கும் எல்லைகள்,செய்யப்படும் தியாகங்கள், குருதியில் ஓடும் நாட்டுப்பற்று என்ற பல நம்பிக்கைகளை, எதார்த்தத்தின் பார் நிறுத்தி முரணைச் சுட்டுகிறது இக்கதை. ஒரு நாட்டின் எல்லையில் சிந்தப்படும் இரத்தம், அந்நாட்டின் தேச பக்தியை காட்டுகிறதா? எனில் மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லைகளை காப்பதற்கான விலைதானோ நமது இரத்தமும் இன்னுயிரும் !
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ! "
நெல்லையப்பன், தெற்கிலிருந்து சென்ற இராணுவன வீரன். அவன் எல்லையில் சந்திக்கும் ஜ்வாலாமுகி, மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண். தத்தமது கோட்பாடுகளுடன், இரு துருவங்களாய், போரில் எதிரிகளாய் நிற்பவர்கள். வாழ்க்கையைப் பற்றியும், அன்பைப் பற்றியும், அவர்கள் உணரும் உரையாடல்கள், உணர்ந்த பின் செய்த முடிவின் விளைவால், வாழ்க்கை அவர்களை துரத்தும் பாதை, என கதை உணர்வுபூர்வமாய் வேகமெடுக்கிறது.
கதையின் இறுதி கட்டத்தில், அவர்களின் தூய அன்பு உணரப்படும் நொடி நம்மை நெஞ்சு விம்ம நெகிழச்செய்து, பேராற்றலாய் வெளிப்படுகிறது. அவர்கள் கன்னி நிலத்தில் தேடி சென்ற மதூக மலரின் வாசமெல்லாம், அமைதியாய், உலகெங்கும் பரவி மணம் வீச நாமும் வாழ்த்துவோம்.
அப்புத்தகத்திலிருந்து என்னைக்கவர்ந்த சில வரிகள்..
இரவில் இருளில் ததும்பிவரும் அழுகை மிகத் தூயது. மிக மென்மையானது. மிக மிக இனியதும்கூட.
ஆயுதம் ஒருவனை ஆண்மையாக உணரச்செய்கிறதென்றால் அது ஓர் இழிவுதான். ஆனால் அது எப்போதுமே அப்படித்தான். ஆண்மை என்றால் ஒரு பாவனை. சிகரெட் அந்த பாவனையை அளிக்கிறது. சீருடை இன்னும். ஆயுதம் மேலும் பலமடங்கு.
வலியைப் பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய்.
அதேபோல மகத்தான அனுபவங்கள் பூமியில நிறைய இருக்கு நாயர். மனுஷனை எறும்பு மாதிரி கொசு மாதிரி அற்பமா ஆக்கற மகத்தான அனுபவங்கள்.அந்த அனுபவங்களுக்கு எந்த எல்லையும் இல்லை. நாம நம்ம அன்றாட வாழ்க்கையில ஏராளமான எல்லைகளைப்போட்டுட்டு வாழறோம். என் வீடு, என் ஊரு, என் நாடு, என் இனம்...மகத்தான அனுபவங்களுக்கு எல்லையே இல்லை. தே ஆர் எஸென்ஷியலி பவுண்ட்லெஸ்... வானம் மாதிரி திறந்துக்கற அனுபவங்கள். நம்ம மனசே பிரபஞ்சமா ஆகிற அனுபவங்கள்...
To buy from Amazon, please click this link

Comments